தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர்
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 54). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் சிவகுமார் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் கைது
*திருவெறும்பூர் தெற்கு காட்டூர் பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (36) ஆட்டோ டிரைவரான இவர் அரியமங்கலம் ஆயில் மில் ரோடு பகுதிக்கு ஒரு சவாரி வந்தார். அப்போது, அவரிடம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (24), அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதன் என்கிற குட்செட் மதன் (39), பாலக்கரையை சேர்ந்த தேவி (38), அரியமங்கலத்தை சேர்ந்த இந்திரா (32) ஆகியோர் போதை மாத்திரை விற்றதாக அரியமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 43 மாத்திரைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல்
*ஸ்ரீரங்கம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (65). இவர் திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு மர்ம ஆசாமி ஒருவர் தொடர்பு கொண்டு சின்னதுரையிடம் பேசி ரூ.1 லட்சம் கடன் கேட்டுள்ளார். அதற்கு சின்னதுரை மறுப்பு தெரிவிக்கவே அவரை தகாத வார்தையால் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி சீட்டுகள் விற்றவர்கள் கைது
*மேட்டுப்பாளையம் அரசு டாஸ்மாக் கடை அருகே லாட்டரி சீட்டுகள் விற்க முயன்ற காருகுடி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (60) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் துறையூர் ரோட்டில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக பள்ளி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குணசேகரனை (70) முசிறி போலீசார் கைது செய்தனர்.
லாரி பறிமுதல்
* மணப்பாறையை அடுத்த கரிச்சாம்பட்டி செல்லும் வழியில் கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மணப்பாறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதை ஓட்டி வந்த டிரைவர் பில்லூரை சேர்ந்த சிவக்குமார் (23) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளரான ரவிசந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவுசெய்தனர்.