தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு: கேரளாவில் கைதான 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு வழக்கில் கேரளாவில் கைதான 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினாா்கள்.
ஈரோட்டில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் வீட்டில் நகை திருட்டுபோன வழக்கில் கேரளாவில் கைதான 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை ஆசிரியர்
ஈரோடு செங்குந்தர்நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 73). அரசு பள்ளிக்கூட ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு சென்னை குரோம்பேட்டையிலும் சொந்த வீடு உள்ளது. இதனால் அடிக்கடி அவர் சென்னைக்கு சென்று வருவது வழக்கம். அதுபோல் கடந்த மே மாதம் 4-ந் தேதி ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது அவர் கதவை பூட்டிவிட்டு தனது காரை வீட்டுக்கு முன்பு நிறுத்தி விட்டு சென்றார்.
கடந்த 8-ந் தேதி அதிகாலையில் ராமச்சந்திரனின் கார் விஜயமங்கலம் சுங்கச்சாவடியை கடந்து சென்றதாகவும், அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 4 பவுன் நகை திருட்டுபோனது தெரியவந்தது. வீட்டில் நகையை திருடிய மர்மநபர்கள், தப்பி செல்வதற்காக வீட்டின் முன்பு இருந்த காரையும் திருடிச்சென்றது தெரியவந்தது.
போலீஸ் காவலில் விசாரணை
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, காரை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும், திருடப்பட்ட காரையும் போலீசார் மீட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த சுலைமான் என்கிற ஷாஜகான், முகமது நிசார் ஆகியோரை ஒரு திருட்டு வழக்கில் கேரள போலீசார் கைது செய்தனா். இதனால் அவர்கள் அங்குள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் சுலைமான், முகமது நிசார் ஆகியோரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஈரோடு முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வீரப்பன்சத்திரம் போலீசார் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சுலைமான், முகமது நிசார் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிந்து இன்று (திங்கட்கிழமை) கோர்ட்டில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். எனவே விசாரணையின் முடிவில் நகை பறிமுதல் செய்யப்பட்டதா? வேறு திருட்டு வழக்குகளில் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? போன்ற விவரங்கள் தெரியவரும்.