கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் திருட்டு


கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

தென்காசி

தென்காசியில் கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கலெக்டர் அலுவலக ஊழியர்

தென்காசி கே.ஆர்.காலனி பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாத் என்பவருடைய மனைவி மகேஸ்வரி. இவர் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் ஆதி திராவிட நலத்துறை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம் போல் வீட்டில் தூங்கினார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விரைந்தனர்

இதுகுறித்து அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மோப்பநாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மகேஸ்வரி இரவில் தூங்கும் முன்பு கதவை பூட்டாமல் திறந்து வைத்து உள்ளார். இதனால் மர்மநபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து நகைகளை திருடி சென்று இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி சென்ற துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story