பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 24½ பவுன் நகை அபேஸ்
கள்ளக்குறிச்சி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 24½ பவுன் நகைகளை அபேஸ் செய்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு பின்புற பகுதியில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகவிழா நடைபெற்றது.
இதில் கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்த கந்தசாமி மகள் விஷ்ணுபிரியா என்பவர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.அப்போது அங்கிருந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள், விஷ்ணுபிரியா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை அபேஸ் செய்தனர்.
இதே கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட சொர்ணபுஷ்பம் என்ற பெண்ணிடம் 13½ பவுன் நகைையயும், வேறு ஒரு பெண்ணிடம் 4 பவுன் நகையையும் மர்மநபர்கள் அபேஸ் செய்து கொண்டு தப்பிச்சென்றனர்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
அபேஸ் செய்யப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.8¾ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 24½ பவுன் நகைகளை மர்மநபர்கள் அபேஸ் செய்து சென்ற சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் போலீசார் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி மர்மநபர்கள் பெண்களிடம் நகைகளை அபேஸ் செய்து சென்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.