நல்லம்பள்ளி அருகேலாரி உரிமையாளர் வீட்டில் 14 பவுன் நகை திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி அருகே லாரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 14 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லாரி உரிமையாளர்
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது35). லாரி உரிமையாளர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு, பச்சியப்பன்கொட்டாய் பகுதியில் உள்ள மாமனார் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் மறுநாள் அவர் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்தும், அதில் இருந்த பொருட்கள் சிதறியும் கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரிந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து ராமலிங்கம் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சென்று தடயங்களை ஆய்வு செய்தனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.