மூங்கில்துறைப்பட்டு அருகே துணிகரம்: முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை


மூங்கில்துறைப்பட்டு அருகே துணிகரம்:  முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை  மர்ம நபர்கள் கைவரிசை
x

மூங்கில்துறைப்பட்டு அருகே முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

கள்ளக்குறிச்சி


மூங்கில்துறைப்பட்டு,


மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி ரோஜாவதி (வயது 55). அ.தி.மு.க.வை சேர்ந்த அண்ணாதுரை ரிஷிவந்தியம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆவார். கடந்த ஆண்டு அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து ரோஜாவதி மட்டும் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டுக்கு ரோஜாவதி சென்றுவிட்டார்.

கொள்ளை

அவர் நேற்று காலை வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ திறந்த நிலையில் அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அவர் வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடன் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

வலைவீச்சு

வீடு நீண்ட நாட்களாக பூட்டி கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்து நகை,பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

மேலும் கைரேகை நிபுணர் விஜய்சங்கர் வரவழைக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தார். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story