குறிஞ்சிப்பாடியில்பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டுசகோதரிகள் கைது


குறிஞ்சிப்பாடியில்பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டுசகோதரிகள் கைது
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

கடலூர் அருகே உள்ள ராமாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ். இவரது மனைவி நிர்மலா (வயது 26). நேற்று முன்தினம், இவர் தனது நகையை அடகு வைப்பதற்காக கண்ணாரப்பேட்டையில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு அரசு பஸ்சில் வந்து இறங்கினார்.

அப்போது, நிர்மலா தான் எடுத்து வந்த கை பையை பார்த்தார். அதில் இருந்த ஒரு பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் பஸ்சில் இருந்து இறங்கிய போது, தனது பின் இருக்கையில் அமர்ந்திருந்த 2 பேர் அவசர அவசரமாக பஸ்சில் இருந்து இறங்கி சென்றதை பார்த்தார். இதனால் சந்தேகத்தின் பேரில், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து, அவர்களது உடைமைகளை சோதனை செய்தார். அதில், நிர்மலாவின் நகையை திருடி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை குறிஞ்சிப்பாடில் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த ராஜா மனைவி துர்கா (22), வெற்றிவேல் மனைவி பாண்டிச்செல்வி (35) என்பதும், இருவரும் சகோதரிகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story