வியாபாரி வீட்டில் 14½ பவுன் நகை, பணம் கொள்ளை; சிறுவனை திருட்டில் ஈடுபடுத்திய 2 பேர் கைது
கன்னிவாடி அருகே வியாபாரி வீட்டில் சிறுவனை வைத்து 14½ பவுன் நகை, பணத்தை திருட வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. வெங்காய வியாபாரி. இவர் கடந்த 14-ந்தேதி வெங்காயம் வாங்குவதற்காக பணத்தை எடுக்க தனது வீட்டில் பீரோவின் லாக்கரை திறந்து பார்த்தார். அப்போது லாக்கரில் வைத்திருந்த பணம் குறைவாக இருந்தது. மேலும் அதனுள் வைக்கப்பட்டிருந்த 14½ பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணி, இதுகுறித்து கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பாலசுப்பிரமணியின் மகனும், 14 வயது சிறுவனும் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக படித்தனர். இதனால் 2 பேரும் நண்பர்களாக பழகினர். அந்த சிறுவன் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டான். இருப்பினும் தனது நண்பனை பார்ப்பதற்காக பாலசுப்பிரமணியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தான். அப்போது வீட்டில் யாரும் இல்லாதபோது கொஞ்சம், கொஞ்சமாக நகைகள் மற்றும் பணத்தை அந்த சிறுவன் திருடினான். அதன்படி, 5 பவுன் தங்கச்சங்கிலி, 5½ பவுன் வளையல் மற்றும் தங்க தோடு, மோதிரம் என 14½ பவுன் நகைகள், ரூ.15 ஆயிரத்தை திருடினான். பின்னர் நகைகள் மற்றும் பணத்தை ரெட்டியார்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த ராஜ் மகன் மாரிமுத்து (வயது 22), கன்னிவாடியை சேர்ந்த முத்துப்பாண்டி (39) ஆகியோரிடம் கொடுத்துள்ளான். அப்போது தான் மாரிமுத்துவும், முத்துப்பாண்டியும் சேர்ந்து அந்த சிறுவனை திருட்டில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 14 வயது சிறுவன் மற்றும் அவனை திருட்டில் ஈடுபட வைத்த மாரிமுத்து, முத்துப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.