சென்னை ஆஸ்பத்திரியில் ஜார்கண்ட் கல்வி மந்திரி மரணம்


சென்னை ஆஸ்பத்திரியில் ஜார்கண்ட் கல்வி மந்திரி மரணம்
x

சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த ஜார்கண்ட் கல்வி மந்திரி ஜகர்நாத் மக்தோ சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 57.

சென்னை,

ஜார்கண்ட் மாநில கல்வித்துறை மந்திரியாக இருந்தவர் ஜகர்நாத் மக்தோ. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது இவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அப்போது சுவாச கோளாறு காரணமாக நுரையீரலில் கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

இதில் அவரது உடல்நலம் தேறியதையடுத்து தனது அன்றாட பணிகளை மேற்கொண்டார்.

மரணம்

இதற்கிடையே கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி அவருக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. உடனே அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை கொண்டு வரப்பட்டு மீண்டும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை இறந்தார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஜார்கண்ட் மந்திரி மறைவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜார்கண்ட் மாநில பள்ளிக்கல்வித் துறை மந்திரி ஜகர்நாத் மஹ்தோ காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் அஞ்சலி

அவருடைய மறைவு செய்தி அறிந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆஸ்பத்திரிக்கு நேற்று நேரில் சென்றார்.

அங்கு ஜார்கண்ட் மந்திரி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவருடைய உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து கொடுத்தார்.

இதற்கிடையே மந்திரி மறைவுக்கு ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.


Next Story