சேலத்தில், இன்றுதனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம்
சேலத்தில், இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, சேலம் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் 3 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக, இன்று (சனிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
முன்னணி நிறுவனம்
முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவன உரிமையாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் சோனா கல்விக்குழும வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது.
இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான பஸ், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந்தேதி எடப்பாடியிலும், அக்டோபர் மாதம் 18-ந்தேதி ஆத்தூரிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், வேலை வாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் லதா, துணை இயக்குனர் மணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.