குழாய் உடைப்பால் சாலையில் ஆறாக ஓடிய காவிரி கூட்டுக்குடிநீர்


குழாய் உடைப்பால் சாலையில் ஆறாக ஓடிய காவிரி கூட்டுக்குடிநீர்
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் குழாய் உடைப்பால் காவிரி கூட்டுக்குடிநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் குழாய் உடைப்பால் காவிரி கூட்டுக்குடிநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

காவிரி குடிநீா் குழாய் உடைப்பு

திருச்சி முத்தரசநல்லூரில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் திருப்பத்தூர் வழியாக ராமநாதபுரம் வரை குழாய் பதித்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பராமரிப்பின்மை காரணமாக அவ்வப்போது சில இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை சாலை புதுப்பட்டி பகுதியில் உள்ள சங்கிலியான் கோவில் அருகே குடிநீர் குழாய் வால்வு திடீரென உடைந்தது. இதளால் சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் பீய்ச்சியடித்தது. மேலும் அந்த தண்ணீர் ஆறு போல சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோரிக்கை

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சரிசெய்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் வெளியேறிய தண்ணீரால் சாலையின் மறுபுறம் குளம் போல் நிரம்பியது, மற்றொரு புறம் குடியிருப்புப் பகுதியில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சுமார் 3 மணி நேரம் தண்ணீர் வீணாகி கொண்டிருந்தது.. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதற்கிடையே இது பற்றி அறிந்த குடிநீர் வடிகால்துறையினர் திருச்சியில் இருந்து காவிரி கூட்டு குடிநீரை திறந்து விடுவதை நிறுத்தி விட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, கோடைக்காலத்தில் குடிநீருக்காக அலையும் இந்த தருணத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகுவது வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story