இந்த விவகாரத்தில் ஆணவ நடவடிக்கைகள் இருப்பதாக நீதிபதி கருத்து: முன்னுக்குப்பின் முரணாக பேசி விசாரணையை குருத்திகா திசை திருப்புகிறார் - மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பரபரப்பு தகவல்கள்


இந்த விவகாரத்தில் ஆணவ நடவடிக்கைகள் இருப்பதாக நீதிபதி கருத்து:  முன்னுக்குப்பின் முரணாக பேசி விசாரணையை குருத்திகா திசை திருப்புகிறார் - மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பரபரப்பு தகவல்கள்
x

முன்னுக்குப்பின் முரணாக பேசி விசாரணையை குருத்திகா திசை திருப்புகிறார் என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பரபரப்பு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

மதுரை


முன்னுக்குப்பின் முரணாக பேசி விசாரணையை குருத்திகா திசை திருப்புகிறார் என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பரபரப்பு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

காதல் திருமண விவகாரம்

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தை சேர்ந்த என்ஜினீயர் மாரியப்பன் வினீத் (வயது 22).

இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவரும், குஜராத்தை பூர்வீகமாக கொண்டவருமான நவீன் படேல் என்பவரின் மகள் குருத்திகாவும் சில ஆண்டுகள் காதலித்துள்ளனர். இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் வினீத்தின் உறவினர்கள் முன்னிலையில் நாகர்கோவிலில் திருமணம் செய்தனர். பின்னர் வினீத்தின் வீட்டில் குருத்திகா வசித்தார்.

இதற்கிடையே தனது மகளை காணவில்லை என நவீன்படேல் குற்றாலம் போலீசில் புகார் அளித்தார். அதுதொடர்பான விசாரணைக்கு போலீஸ் நிலையத்தில் வினீத்தும், குருத்திகாவும் ஆஜராகிவிட்டு வீடுதிரும்பினர். அப்போது வினீத்தை தாக்கிவிட்டு, குருத்திகாவை அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் சென்றனர்.

தலைமறைவு

இந்த சம்பவம் தொடர்பாக நவீன் படேல், அவரது மனைவி தர்மிஸ்தா படேல், ராஜேஸ் படேல், மைத்ரிக் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இவர்களில் சிலரை போலீசார் கைது செய்தனர். இதனால் நவீன் படேல், அவருடைய மனைவி உள்ளிட்டோர் தலைமறைவானார்கள்.

பின்னர் தனது மனைவியை மீட்டு ஆஜர்படுத்த வேண்டும் என்று வினீத், மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் குருத்திகாவை மீட்டு போலீசார் ஆஜர்படுத்தினர். அவரிடம் ஐகோர்ட்டு விசாரித்தபோது, தனது உறவினர்களுடன் செல்ல விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

இதனால் அவரது விருப்பத்தின்பேரில் உறவினர்களுடன் அனுப்பிவைத்து அந்த வழக்கை ஐகோர்ட்டு முடித்துவைத்தது.

அதேநேரத்தில் குருத்திகா கடத்தல் வழக்கில் நவீன் படேல் உள்ளிட்ட 8 பேர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

முன்னுக்குப்பின் தகவல்கள்

அந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

காதல் திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் குருத்திகா, முன்னுக்குப்பின் முரணாகவும், தவறான தகவல்களையும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். அதாவது, தனக்கும் குஜராத்தை சேர்ந்த வாலிபர் மைத்ரிக் என்பவருக்கும் குஜராத் மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்துவிட்டது என போலீசில் தெரிவிக்கிறார். அன்றைய தினம், குருத்திகாவின் குடும்பத்தினர் அனைவரும் தென்காசியில்தான் இருந்துள்ளனர். ஆனால் இதுசம்பந்தமாக குஜராத் வாலிபர் மைத்ரிக்கிடம் விசாரித்தபோது, எங்களுக்கு தென்காசியில் வைத்து திருமண நிச்சயதார்த்தம்தான் நடந்துள்ளது, என்றார். குருத்திகா தாக்கல் செய்த திருமண புகைப்படங்களை எடுத்த போட்டோகிராபர்களிடம் கேட்டபோதும், திருமணம் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

குருத்திகாவுடன் சம்பந்தமில்லை

தனது மகள் குறித்து போலீசில் அளித்த புகார் குறித்து குருத்திகாவின் தாயார் தர்மிஸ்தா படேலிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், வினீத் உடன் குருத்திகாவுக்கு திருமணம் நடந்துவிட்டதால், அவருடனேயே குருத்திகா செல்லட்டும் என்று கூறி, எனக்கும், என் மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

அப்போது, தன் மகள் குருத்திகாவுக்கு, குஜராத் வாலிபர் மைத்ரிக் உடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று குற்றாலம் போலீசாரிடம் அவர் ஏன் சொல்லவில்லை? என்ற கேள்வி எழுகிறது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை பாதிக்கும் வகையிலும், போலீசாரை திசை திரும்பும்படியும் குருத்திகா, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவிக்கிறார். எனவே அவர் மீது வழக்குபதிவு செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே மனுதாரர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அரசு வக்கீல் வாதாடினார்.

மனுக்கள் தள்ளுபடி

மனுதாரர்கள் தரப்பு வக்கீல், மனுதாரர்கள் மீதான புகாரில் உண்மைத்தன்மை இல்லை. எந்தஒரு அடிப்படையும் இன்றி அவர்கள் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.

இதேபோல வினீத் தரப்பு வக்கீல் டி.வெங்கடேஷ் ஆஜராகி, வினீத்தை தாக்கிவிட்டு, குருத்திகாவை மனுதாரர் தரப்பினர் கடத்திச் சென்றதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன என்றார்.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் ஆணவ நடவடிக்கைகள் இருப்பது உறுதியாகி உள்ளது. முன்ஜாமீன் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டால், ஏற்கனவே கைதானவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்படும், என்றார்.

இதனையடுத்து, 8 பேரின் முன்ஜாமீன் மனுக்களை மனுதாரர் தரப்பினர் வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

அதன்பேரில் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும், பின்னர் ஏற்கனவே கைதான 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story