மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார்.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சக்திகுமார் பரமத்திவேலூர் வழியாக நாமக்கல் வந்தார். அப்போது பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணி பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், தாசில்தார் கலைச்செல்வி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். இதில் அரசு தரப்பு வக்கீல்கள், பரமத்தி வக்கீல்கள், சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்வில் கலந்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி சக்திகுமார் வக்கீல்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பரமத்தி நீதிமன்ற வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த நீதிமன்றத்திற்கு செல்ல ஓவியம்பாளையம் பிரிவு சாலை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று சுற்றி வர வேண்டி உள்ளது. எனவே நீதிமன்றம் அருகே பைபாஸ் பிரிவு சாலையில் டிவைடர் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற வளாகம் அருகே பைபாஸ் சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி சம்பந்தப்பட்ட துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என கூறினார்.