அம்மாபேட்டையில் ரூ.500 லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்; ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
அம்மாபேட்டையில் ரூ.500 லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
அம்மாபேட்டையில் ரூ.500 லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ரூ.500 லஞ்சம்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 2009-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வி.சந்திரன். இவர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அம்மாபேட்டை ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த செல்லமுத்து என்பவரை பிடித்து விசாரித்தார். அப்போது அவருடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி வைத்து கொண்டார். பின்னர் செல்லமுத்து அந்த ஓட்டுனர் உரிமத்தை திருப்பி கேட்டதற்கு ரூ.500 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து செல்லமுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்பேரில் கடந்த 4-2-2009 அன்று ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கு செல்லமுத்து ரூ.500-ஐ சப்-இன்ஸ்பெக்டர் சந்திரனிடம் லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் சந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
3 ஆண்டு ஜெயில்
இதுதொடர்பான வழக்கு ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் லஞ்சம் வாங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 2 பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். எனவே சப்-இன்ஸ்பெக்டர் சந்திரனுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.