காப்பீட்டு தொகை வழங்க மறுப்பு: ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு


காப்பீட்டு தொகை வழங்க மறுப்பு:  ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்  நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

காப்பீட்டு தொகையை வழங்க மறுத்த வழக்கில் ஆயுள் காப்பீட்டு நிறுவன கிளை மேலாளர் உள்ளிட்ட 5 பேர் ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஓய்வு பெற்ற போலீஸ்காரர்

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் பேச்சியண்ணன். இவரது மனைவி கவுரி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 6 மாதத்துக்கு ஒரு முறை ரூ.2,545 வீதம் 15 ஆண்டுகளுக்கு செலுத்தும் வகையில் ரூ.1 லட்சம் ஆயுள் காப்பீடு செய்திருந்தார். அதில் தனது கணவர் பேச்சியண்ணனை வாரிசுதாரராக இணைத்திருந்தார். ஆயுள் காப்பீடு நிறுவனம் (எல்.ஐ.சி.) மல்லசமுத்திரம் கிளையில் கவுரி ஆயுள் காப்பீடு செய்திருந்தார். அதற்கான இன்சூரன்ஸ் பாலீசி வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2012-ம் ஆண்டு நவம்பர் பாலிசி தொகையை நிறுவன ஏஜென்டிடம் கவுரி வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட ஏஜென்டு 1½ மாதமாக ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தாமல் விட்டுவிட்டார். அதனால் கவுரியின் பாலிசி காலாவதியாகிவிட்டது. அதை தொடர்ந்து நிறுவன ஏஜென்டு, கவுரியிடம் வெற்று வெள்ளைத்தாள் உள்ளிட்ட பல ஆவணங்களில் கையெழுத்து பெற்று கொண்டு, 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் கவுரியின் பாலிசியை புதுப்பித்துள்ளார்.

வழக்கு

இதற்கிடையில் கவுரி 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி திடீரென மாரடைப்பால் இறந்தார். இதையடுத்து கவுரியின் வாரிசுதாரரான கணவர் பேச்சியண்ணன், தனக்கு தர வேண்டிய ரூ.1 லட்சம் வழங்குமாறு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை அணுகினார். ஆனால் காப்பீட்டு நிறுவனம் கவுரிக்கு 2012-ம் ஆண்டே கேன்சர் நோய் இருந்ததாகவும், அவற்றை புதுப்பிக்கும்போது மறைத்து விட்டதாகவும், அதனால் இழப்பீட்டு தொகை வழங்க இயலாது என நிராகரித்தது.

இதையடுத்து தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் மூலம் இன்சூரன்ஸ் நிறுவன கிளை மேலாளர், ஏஜென்டு, நாமக்கல் முதுநிலை மேலாளர், மண்டல மேலாளர், கோட்ட மேலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த 2014-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு

இந்த வழக்கில் நீதிபதி தமிழ்செல்வி, உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில் மல்லசமுத்திரம் கிளை மேலாளர் உள்பட 5 பேரும் பேச்சியண்ணனுக்கு வழங்க வேண்டிய ரூ.1 லட்சம் பாலிசி தொகையை 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 6 சதவீதம் வட்டியுடன் 2 மாதத்துக்குள் கொடுக்க வேண்டும். மேலும் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

1 More update

Next Story