அம்மாபேட்டையில் சிறுமியை திருமணம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
அம்மாபேட்டையில் சிறுமியை திருமணம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அம்மாபேட்டையில் சிறுமியை திருமணம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
செங்கல் சூளை தொழிலாளி
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மோரூர் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மகன் பரத் (வயது 20). இவர் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி பகுதியில் தங்கி இருந்து ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். அப்போது 14 வயது சிறுமி ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியை அடைய பரத் ஆசைப்பட்டார். எனவே சிறுமி பள்ளிக்கூடம் செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் நேரில் சந்தித்து வந்தார். அப்போது சிறுமியை காதலிப்பதாக தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறினார்.
2 பேரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்று சிறுமியிடம் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்தார். கடந்த 23-3-2021 அன்று கோவிலுக்கு அழைத்துச்சென்ற பரத், சிறுமிக்கு கட்டாய தாலி கட்டினார். பின்னர் சிறுமியை அழைத்துகொண்டு மேட்டூர் சென்றார். இதற்கிடையே சிறுமியை காணாத பெற்றோர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடினர். அப்போது வாலிபர் பரத், மேட்டூரில் சிறுமியுடன் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டனர். வாலிபர் பரத் கைது செய்யப்பட்டார்.
20 ஆண்டு ஜெயில்
மேலும் இது தொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஆர்.மாலதி வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என அந்த உத்தரவில் நீதிபதி ஆர்.மாலதி கூறி இருந்தார். எனவே வாலிபர் பரத்துக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை, ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.