அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை: "அருமையான வாதம்" என நகைச்சுவையாக குறிப்பிட்ட நீதிபதிகள்...!
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உணவு இடைவேளைக்காக பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை,
அ.தி.மு.க . பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தங்களது வாதங்களை முன்வைத்தனர். தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதாடி வருகிறது.
இந்த நிலையில் இன்று 5-வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் வாதிடும்போது, பொதுக்குழு விவகாரத்தில் கோர்ட்டிலும், தேர்தல் ஆணையத்திலும் பன்னீர்செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார்.
ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என்று தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது என்பது பொதுக்குழு நிகழ்ச்சி நிரலில் இல்லாதபோது அவரை எப்படி கட்சியில் இருந்து நீக்கினீர்கள்? என்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பினர்.
ஓபிஎஸ்-ஐ நீக்க வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்ததன் பேரி்லே அவர் நீக்கப்பட்டார் - கட்சி தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது.
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸூம் தேர்ந்தெடுக்கப்பட்டார் - அதிமுக சார்பில் வாதம் வைக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் "அருமையான வாதம்" என நீதிபதிகள் நகைச்சுவையாக குறிப்பிட்டனர்.
இதனையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உணவு இடைவேளைக்காக பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.