உரிய விவரங்கள் இல்லாமல் பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் கடும் அபராதம்- நீதிபதிகள் எச்சரிக்கை


உரிய விவரங்கள் இல்லாமல் பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் கடும் அபராதம்- நீதிபதிகள் எச்சரிக்கை
x

உரிய விவரங்கள் இல்லாமல் பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர் .

மதுரை


நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை மாவட்டம் களக்காடு நவநீதகிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம், சேரன்மகாதேவி மற்றும் கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையம் முதல் கன்னடியன் கால்வாய் பாலம் வரை மற்றும் அம்பாசமுத்திரம் வளைவு முதல் அம்பாசமுத்திரம் ரெயில்வே கேட் வரை ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே மேற்கண்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் முறையாக இல்லாமல் பொதுவாக இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். அவரது புகார் குறித்த முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றார். அப்போது நீதிபதிகள், பொது நல வழக்குகளை மனுதாரர்கள் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யக்கூடாது. பொது நல வழக்குகளை தாக்கல் செய்வதற்கு முன், தொடர்புடைய அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். பதில் இல்லை என்றால், பொது நல வழக்கிற்காக ஆய்வு மேற்கொண்டு உரிய ஆதாரங்கள், புள்ளி விவரங்களுடன் பொது நல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். விசாரணை முடிவில், பொதுவான பல கோரிக்கைகளை முன் வைத்து, ஆவணங்கள், விவரங்கள் இன்றி பொது நல வழக்கு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story