இலங்கையில் நடந்த இனக்கலவரத்தில் இந்து தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதை நீதித்துறை கவனத்தில் கொள்கிறது - மதுரை ஐகோர்ட்டு கருத்து


இலங்கையில் நடந்த இனக்கலவரத்தில்  இந்து தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதை நீதித்துறை கவனத்தில் கொள்கிறது - மதுரை ஐகோர்ட்டு கருத்து
x

இலங்கையில் நடந்த இனக்கலவரத்தில் இந்து தமிழர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதை நீதித்துறை கவனத்தில் கொள்கிறது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

மதுரை


இலங்கையில் நடந்த இனக்கலவரத்தில் இந்து தமிழர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதை நீதித்துறை கவனத்தில் கொள்கிறது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

குடியுரிமை கேட்டு மனு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அபிராமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். நான் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தேன். எனக்கு குடியுரிமை கேட்டு திருச்சி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்தேன். ஆனால் எனது விண்ணப்பத்தை இதுவரை பொதுத்துறை செயலாளருக்கு கலெக்டர் அனுப்பாமல் நிலுவையில் வைத்துள்ளார். எனது விண்ணப்பத்தை பொதுத்துறை (வெளிநாட்டவர் பிரிவு) செயலாளருக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் புலம்பெயர்ந்த பெற்றோரின் மகள் என்றாலும், அவர் இந்தியாவில்தான் பிறந்துள்ளார். அவர் ஒருபோதும் இலங்கை பிரஜையாக இருந்ததில்லை. அவருடைய கோரிக்கையை ஏற்காவிட்டால், எந்த நாட்டையும் சாராதவர் என்ற நிலை ஏற்படும். அது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்து தமிழர்கள் பாதிப்பு

நாடாளுமன்றம், சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்தது. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்களாதேசம் போன்ற அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி இருந்தால், அவர்கள் இந்தியக் குடியுரிமையை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை வரவில்லை என்றாலும், அதே கொள்கை இந்த நாட்டிற்கும் பொருந்தும். இனக்கலவரத்தில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையின் இந்துத்தமிழர்கள் என்பதை நீதித்துறை கவனத்தில் கொள்கிறது.

மனுதாரரின் கோரிக்கை அனுமதிக்கப்படுகிறது. அவரது விண்ணப்பத்தை திருச்சி மாவட்ட கலெக்டர், பொதுத்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அவர், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கு மனுதாரரின் மனுவை 16 வாரத்தில் விசாரணைக்கு எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story