இளநிலை உதவியாளர் தர்ணா போராட்டம்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் இளநிலை உதவியாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவை
கோவை சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் சரவணகுமார். இவர், கடந்த 17.10.2014 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட் டார்.
இதனால் அவருக்கு 2022 டிசம்பர் வரை 50 சதவீத பிழைப்பு ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை அவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரவணகுமார் தனக்கு பிழைப்பு ஊதியம் வழங்கக் கோரி கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தனது மனைவியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், எனது மனு மீதான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே எனது பணியிடம் உபரி என்று மாற்றம் செய்து விட்டதால் கருவூலக அலுவலகத்தில் ஊதியப் பட்டியல் ஏற்க மறுக்கிறார்கள்.
எனக்கு கடந்த 5 மாதம் பிழைப்பு ஊதியம் வழங்கபடவில்லை. இதனால் மனம்,உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளேன்.
எனவே எனக்கு உடனடியாக 50 சதவீத ஊதியம் வழங்க வேண்டும் என்றார். அவரிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர் போராட்டத்தை கைவிட்டார்.