ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு பரிசு
நெல்லையில் நடந்த ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.
பேட்டை:
நெல்லை மாவட்ட 24-வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பாளையங்கோட்டையில் 2 நாட்கள் நடைபெற்றது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ கலந்துகொண்டு சுடர் ஜோதியை ஏற்றினர். தொடர்ந்து வெவ்வேறு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 6 பிரிவுகளில் (12,14,16,18,20 வயதுக்கு உட்பட்டோர்கள் மற்றும் பொது பிரிவுகளில் 500 வீரர்கள், 400 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 900 பேர் கலந்து கொண்டனர். போட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவில் எஸ்.ஏ.வி ஸ்போர்ட்ஸ் அகாடமி முதல் இடத்தையும், பால்கான் ஸ்போர்ட்ஸ் அகாடமி இரண்டாவது இடத்தையும், நாரணம்மாள்புரம் ஸ்போர்ட்ஸ் அகாடமி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
பெண்கள் பிரிவில் எஸ்.ஏ.வி அணி முதலிடத்தையும், நாரணம்மாள்புரம் அணி 2-வது இடத்தையும், பால்கான் அணி 3-வது இடத்தையும் பிடித்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் நெல்லை மாவட்ட தடகள சங்க தலைவர் செய்யது நவாஸ் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். முடிவில் மாவட்ட தடகள சங்க செயலாளர் சேது நன்றி கூறினார்.