குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவு பண்டங்கள்-மருத்துவர், தாய்மார்கள் கருத்து
நமது வீட்டில் சமைக்கின்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டுவந்த காலம் உண்டு. சாதம், இட்லி, தோசை மட்டுமே பிரதான உணவுகளாக இருந்தன. சோளம், உளுந்து, பயிறு, கடலை, அரிசி ஏதோ ஒன்றை வறுத்துத் தருவார்கள். மிஞ்சிப் போனால் முறுக்கு, சீடை, கடலை மிட்டாய் போன்ற நொறுக்குத் தீனிகளை கடைகளில் வாங்கிச் சாப்பிடுவோம்.
அவை கலப்படம் இல்லாமலும், மண் சார்ந்த உணவுகளாகவும், சுவை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் குறைவில்லாமல் இருந்தன. ஓட்டல்களுக்கு எப்போதோ ஒருநாள் தவிர்க்க முடியாமல் போவது உண்டு. இப்போது நிலைமை அப்படி அல்ல. ஓட்டல்களுக்கு போவது ஒரு நாகரிகமான, கவுரவமான நடைமுறையாகி விட்டது.
மாறிவரும் உணவு பழக்கம்
பெரும்பாலான வீடுகளில் சமையல் அறைகள் ஓட்டல்களுக்கு போய்விட்டன. வீடுகள் தங்கும் ஓட்டல்களாக மாறிவருகின்றன. இதனால் பல்வேறு ஒவ்வாமைகள், பிரச்சினைகள் உடல்ரீதியாக நாம் சந்திக்க நேர்கின்றன.
குழந்தைகளும் இயற்கையான உணவை விட்டு செயற்கையாக செய்யப்படும் கவர்ச்சியான உணவு வகைகளையே விரும்புகிறார்கள். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், சாக்லெட், லேஸ் போன்ற தின்பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பீசா, பர்கர் போன்ற ரெடிமேடு உணவு வகைகளுக்கும் அடிமையாகி வருகிறார்கள்.
நாகரிம் என்ற பெயரால் மாறிவரும் இந்த உணவு பழக்கங்களால் ஏற்படுகின்ற சாதக பாதங்கள் குறித்து குழந்தை மருத்துவர் மற்றும் தாய்மார்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.
அதன் விவரம் வருமாறு:-
நோய்கள் வர வாய்ப்பு
நாமக்கல்லை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அபிநயா மதன்குமார் கூறியதாவது :-
குழந்தைகள் துரித உணவுகளை(பாஸ்ட் புட்) சாப்பிடுவதால் பல வழிகளில் தீங்கு ஏற்படுகிறது. சில சிக்கல்கள் ஆரம்பத்திலும், மற்றவை பின்னரும் தோன்றக்கூடும். இந்த உணவுகளில் பெரும்பாலும் அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் மோசமான கொழுப்பு சத்தும் உள்ளடங்கி இருக்கும். மேலும் அவற்றில் சர்க்கரை, உப்பு அதிகமாகவும் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான புரதங்கள் குறைவாகவும் இருக்கும்.வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் துரித உணவுகளில் காணப்படுவதில்லை. இந்த ஊட்டச்சத்து சமநிலையற்ற உணவுகளை நம் குழந்தைகள் அடிக்கடி உண்பதால் விரைவான எடை அதிகரிப்பு, உடல்பருமன் உண்டாகும்.
மேலும் நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற கடுமையான நோய்களும் வரக்கூடும். மேலும் துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் சில உணவு சேர்க்கைகள் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே குழந்தைகளுக்கு துரித உணவுகளுக்கு மாறாக ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே நாம் செய்து தருவது மிகவும் முக்கியம்.
பள்ளிக்கூடம் முடித்து வீட்டிற்கு வரும் பிள்ளைகளுக்கு நாம் வேகவைத்த சுண்டல், பயறு வகைகள், கடலை உருண்டை, சத்துமாவு கஞ்சி, உருளைக்கிழங்கு கட்லட், ராகி மால்ட், பொரி உருண்டை, பாலில் ஊற வைத்த அவல், பழ சாலட் போன்றவற்றை தரலாம். பெற்றோர்களே குழந்தைகளுக்கு வழிகாட்டி. எனவே நாமும் 'ஜங்க்' உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
தயாரிப்பது எளிது
நாமக்கல்லை சேர்ந்த இல்லத்தரசி வனிதா மோகன்:-
இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை மிகவும் ஆக்கிரமித்து வருகிறது. அவை உண்பதற்கு மிகவும் சுவையாகவும், தயாரிப்பதற்கு எளிதாகவும் இருந்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகளை குழந்தைகளும், இளைஞர்களும் உணர்வதில்லை.
அவைகளில் பெரும்பாலான உணவு வகைகள் முன்கூட்டியே தயாரித்து வைத்து தேவைப்படும் போது சூடு செய்து பயன்படுத்தும் படியாக இருக்கும். அவைகளில் நம் உடலுக்கு தேவையான சத்து தன்மை இருக்கிறதா? என்பதை அறியாமல் உண்கிறார்கள். அதனாலேயே உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது.
இயற்கை உணவு வகைகள் உடலுக்கு கேடு விளைவிப்பதில்லை. பெற்றோர்கள் துரித உணவு வகைகளை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதால், வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஆனால் குழந்தைகள் அடம் பிடித்து கேட்கிறார்கள் என்பதற்காக சில பெற்றோர் வாங்கி கொடுக்கிறார்கள். இந்த பழக்கத்தை மாற்ற வேண்டும்.
சிறுதானியங்கள்
எருமப்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி கண்மணி:-
எங்கள் பகுதியில் சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் அதிக அளவில் விளைகின்றன. இவற்றையே நாங்கள் நொறுக்கி தீனியாக குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பொருட்களை தவிர்த்து விடுவோம். ஒருசிலர் அவற்றை வாங்கி கொடுத்து அதினால் வரும் தீமைகளை அனுபவித்து வருகிறார்கள்.
நகர்புறத்தில் இளைஞர்கள் பலர் துரித உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். பெற்றோர் வசதி படைத்தவர்களாக இருப்பதால், குழந்தைகள் எதை கேட்டாலும் வாங்கி கொடுக்கிறார்கள். ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை துரித உணவுகள் பாதிக்கும் என்பதை அவர்கள் அறிவது இல்லை.
ஆரோக்கியத்திற்கு கேடு
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை பிரிவில் படிக்கும் கல்லூரி மாணவி நிவேதா : -
இயற்கையாக விளைவிக்கப்படும் கடலை, சோளம், பயிறு, உளுந்து போன்றவற்றில் பல்வேறு சத்துக்கள் இருப்பதை நாங்கள் எங்களது பாடங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். எனவே அது தொடர்பாக மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனால் சில இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் துரித உணவுகளை வாங்கி சாப்பிடுவது தான் நாகரிகம் என்று எண்ணுகிறார்கள். அதற்காகவே அதை வாங்கி சாப்பிடுகிறார்கள்.
என்னை பொறுத்த வரையில் நாகரிகத்தை இதர விஷயங்களில் வைத்து கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் நாகரீகம் என்கிற பெயரில் ஆரோக்கியமற்ற உணவை உண்ணக்கூடாது. துரித உணவுகள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் அல்லது எண்ணெயில் பொறித்தவையாக இருக்கும். அது பார்ப்பதற்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். சுவைப்பதற்கு கூட சில துரித உணவுகள் நன்றாக இருக்கும். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்பதை நாம் ஒருபோதும் மறந்து விட கூடாது.
கவர்ச்சியான உணவு
பரமத்திவேலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருமுருகன் :-
வீட்டில் தினசரி சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவை உடலுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது என்பது எல்லோருக்கும் தெரியும். இவற்றையே மீண்டும், மீண்டும் சாப்பிட்டால் போர் அடித்து விடும். எனவே ஒரு மாற்றத்திற்காக சிலர் துரித உணவுகளை நாடி செல்வார்கள். அதில் தவறு இல்லை என நான் எண்ணுகிறேன். ஆனால் எப்போது பார்த்தாலும் இளைஞர்கள் சிலர் செயற்கையாக செய்யப்படும் கவர்ச்சியான உணவு வகைகளையே வாங்கி உண்ணுகிறார்கள். அது உடல்நலத்திற்கு கேட்டை விளைவிக்கும்.
குழந்தைகளை பொறுத்த வரையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் ஸ்நாக்ஸ்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தாய்மார்கள் இயற்கையாக விளையும் வேகவைத்த சுண்டல், பயறு வகைகள், கடலை உருண்டை போன்றவற்றை கொடுத்து பழக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.