பதவியை பொறுப்பாக பார்த்தால்தான் நீதி வழங்க முடியும்


பதவியை பொறுப்பாக பார்த்தால்தான் நீதி வழங்க முடியும்
x
தினத்தந்தி 4 Jun 2023 1:00 AM IST (Updated: 4 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பதவியை பொறுப்பாக பார்த்தால்தான் நீதி வழங்க முடியும் என்று பொள்ளாச்சியில் நடந்த பாராட்டு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசினார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பதவியை பொறுப்பாக பார்த்தால்தான் நீதி வழங்க முடியும் என்று பொள்ளாச்சியில் நடந்த பாராட்டு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசினார்.

பாராட்டு விழா

வக்கீலாக இருந்து நேரடியாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பொள்ளாச்சியை சேர்ந்த கே.வி.விஸ்வநாதன் என்பவர் கடந்த 19-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஒரு தனியார் கல்லூரியில் நேற்று மாலை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதனுக்கு, வக்கீல்கள் சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில் வசிக்கும் போது அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்தோம். அப்படி வாழ்ந்தால் தான் வாழ்க்கையில் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற முடியும். வக்கீல்கள் கடுமையாக உழைக்க வேண்டும். எதைபற்றியும் கவலைப்பட கூடாது. அப்போதுதான் வழக்குகளில் சிறப்பாக செயல்பட முடியும்.

பதவி அல்ல பொறுப்பு

என் தந்தை தொழிலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் எனக்கு முன் மாதிரியாக இருந்து வருகிறார். என் தாயிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொண்டேன். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்பதை பதவியாக பார்க்கவில்லை. பொறுப்பாக நான் பார்க்கிறேன். அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் தான் நீதி வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சப்-கலெக்டர் பிரியங்கா, சப்-கோர்ட்டு நீதிபதி மோகனவள்ளி, ஜே.எம்.2 மாஜிஸ்திரேட்டு பிரகாசம், நாமக்கல் கூடுதல் மாவட்ட நீதிபதி பாலகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்க தலைவர் வக்கீல் துரை மற்றும் சங்க நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story