சிறப்பாக தோட்டங்களை பராமரித்த ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
தஞ்சை கோர்ட்டு வளாகத்தில் சிறப்பான முறையில் தோட்டத்தை பராமரித்த ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை நீதிபதி மதுசூதனன் வழங்கினார்.
தஞ்சாவூர்:-
தஞ்சை கோர்ட்டு வளாகத்தில் சிறப்பான முறையில் தோட்டத்தை பராமரித்த ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை நீதிபதி மதுசூதனன் வழங்கினார்.
உலக சுற்றுச்சூழல் தினம்
தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்று சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன், 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி இந்திராணி, போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு செயலாளர் சுதா வரவேற்றார்.
தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கலைச்செல்வன், தஞ்சை மாவட்ட வன அதிகாரி அகில்தம்பி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள தோட்டங்களை பார்வையிட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ள தோட்டத்திற்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தனர்.
விழிப்புணர்வு பாடல்
மேலும் தஞ்சை அன்னை சத்யா சிறுமியர் இல்லத்தின் மாணவிகள் கவுசிகா, லெட்சுமி, கயல்விழி ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பாடல் மற்றும் கவிதை வாசித்தனர்.
மேலும் சிறந்த முறையில் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு அதன் சுற்றுப்புறத்தை சிறப்பாக பராமரித்த நீதிமன்ற ஊழியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை நீதிபதி மதுசூதனன் வழங்கினார். இதில் ஓய்வு பெற்ற தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார், தஞ்சைமாவட்ட வக்கீல் சங்க செயலாளர் சசிக்குமார் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் வக்கீல் ஜீவக்குமார் நன்றி கூறினார்.