சின்ன சேலம் மாணவியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்-இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்

சின்ன சேலம் மாணவியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளார்.
சேலம் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், இந்துக்களின் உரிமை மீட்க பிரசார பயண கூட்டம் நேற்று சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நடைபெற்றது. இதற்கு சேலம் கோட்ட தலைவர் சந்தோஸ்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் பழனிசாமி வரவேற்று பேசினார். மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் உள்ளார்கள் என்று கூறி வருகிறோம். அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டை அழிக்க வெளிநாட்டு சதிகள் காத்து கொண்டு உள்ளன. எனவே தமிழ்நாட்டில் உளவுத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவின் பலமான பிரதமராக மோடி உள்ளார். காஷ்மீரில் இந்துக்கள் வாழ முடியாது என்ற நிலை மாறி தற்போது தீவிரவாதிகளை மக்கள் பிடித்து கொடுக்கும் நிலை உருவாகி இருக்கிறது. சின்ன சேலம் மாணவியின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி (கிழக்கு), சின்னுசாமி (மேற்கு), மாநில அமைப்பாளர் பக்தன், மாநில செயலாளர் வெங்கடேஸ்ரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.






