ஐகோர்ட்டு நீதிபதியாக பி.வடமலை பதவி ஏற்பு


ஐகோர்ட்டு நீதிபதியாக பி.வடமலை பதவி ஏற்பு
x

சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக பி.வடமலை நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

பதவி ஏற்பு

மதுரை மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய பி.வடமலையை, சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து கடந்த 23-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி நீதிபதி பி.வடமலை, சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து நீதிபதி பி.வடமலையை வாழ்த்தி வரவேற்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் பேசியதாவது:-

அரசு பள்ளி மாணவர்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 1966-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி பிறந்த நீதிபதி பி.வடமலை, அரசு பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பையும், உடுமலைப்பேட்டை அரசு கல்லூரியில் பி.காம் பட்டப்படிப்பையும், கோவை அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து உள்ளார். கல்வி அனைத்தையும் தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரிகளில் முடித்த நீதிபதி பி.வடமலையை, ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன். உங்களை கண்டு தமிழ்நாடு மக்கள் பெருமைப்படுகிறார்கள். 1990-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். யு.கே.ஆறுமுகத்திடம் ஜூனியராக பணியாற்றினார்.

28 ஆண்டு அனுபவம்

1995-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நீதித்துறையில் நுழைந்தார். பின்னர் சார்பு நீதிபதியாகவும், மாவட்ட நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்று, சுமார் 28 ஆண்டுகள் கீழ் கோர்ட்டில் பணியாற்றிய அனுபவத்துடன், தற்போது ஐகோர்ட்டு நீதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ளார். அவரை வக்கீல்கள் அனைவர் சார்பிலும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெற்றோருக்கு நன்றி

இவரை தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் கமலநாதன், பெண் வக்கீல்கள் சங்க தலைவர் லூயிசால் ரமேஷ், லா அசோசியேசன் தலைவர் எல்.செங்குட்டுவன் ஆகியோர் வாழ்த்தி வரவேற்று பேசினர்.

இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்து நீதிபதி பி.வடமலை பேசினார். அப்போது, தன் பெற்றோருக்கும், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.

16 காலியிடங்கள்

இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள், மூத்த வக்கீல்கள், வக்கீல்கள் என்று ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 75 ஆகும். தற்போது நீதிபதி பி.வடமலை நீதிபதியாக பதவி ஏற்றதன் மூலம் நீதிபதிகளின் எண்ணக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. 16 இடங்கள் காலியாக உள்ளன.


Next Story