அறிவியல், ஆன்மிக சிறப்பு கொண்ட செட்டிநாட்டு நகைகள்


செட்டிநாட்டு நகைகள் அறிவியல்,ஆன்மிக சிறப்பு கொண்டவையாக விளங்குகின்றன.

சிவகங்கை

காரைக்குடி,

செட்டிநாட்டு நகைகள் அறிவியல்,ஆன்மிக சிறப்பு கொண்டவையாக விளங்குகின்றன.

வாணிபம்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தங்கம், வைரம், நவரத்தினக்கற்கள் பற்றி அறியப்பட்டு இருந்தாலும் சேர, சோழ, பாண்டியர் காலத்தில் இருந்து தான் அதன் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது. செல்வந்தர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளவும், செல்வாக்கு படைத்தவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசுப் பொருளாக வழங்கவும் தங்க, வைர, நவரத்தினங்களை பயன்படுத்த தொடங்கினர்.

வெளிநாடுகளுடனான வாணிபத்தில் இவை முக்கியத்துவம் பெற்றன. செட்டிநாட்டு பகுதியை சேர்ந்தவர்கள் இதனை அணிந்து கொள்வதில் ஆர்வமும், வைத்திருப்பதில் பெருமையும் உடையவர்களாக இருந்தனர். தங்க, வைர நகைகள் மீது இந்தபகுதி மக்களுக்கு இருந்த மோகத்தை அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைத்துக் கொண்டாடிய பெயர்களிலேயே அறிந்து கொள்ளலாம்.

மருத்துவ குணம்

தங்கம், வைரம்,முத்து,மாணிக்கம், மரகதம், புஷ்பம், ரத்தினம், தங்கராஜ் இது போன்ற தொடர்புடைய ஏராளமான பெயர்களை வைத்திருப்பது அவைகளின் மீதான இவர்களின் ஈர்ப்பை காட்டுகிறது.

நவரத்தின கற்கள் பதித்த மோதிரம் அணிவதன் மூலம் அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்தவும் பாதிப்புகளை குறைக்கவும் முடியும் என்றும் நம்பினர். மேலும் தங்கப் பூண் போட்ட ஒரு வகை ருத்ராட்சத்தை அணிவதன் மூலம் சீரான ரத்த அழுத்தத்தை பெற முடியும் என்ற மருத்துவ குணங்களையும் அறிந்திருந்தனர். மேலும் பல்வேறு வகையான காதணிகளை அணிந்தனர். இதன் மூலம் நரம்புகள் புத்தாக்கம் பெற்று, புத்திசாலித்தனத்தை அதிகரிக்க முடியும் எனவும் அறிந்திருந்தனர்.

அதனாலேயே சிறு குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தி குழந்தைகளை சுறுசுறுப்பாக்கி அறிவுத்திறனை மேம்படு த்தி உள்ளனர். இவ்வாறு தங்க, வைர. நவரத்தின நகைகளை எப்படி பயன்படுத்தினால் என்ன நன்மை என்பதனையும் அறிந்து வைத்திருந்தனர்.

உலக புகழ்

நவக்கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நவரத்தின கல்லோடு பொருத்தம் உடையதாக இருக்கும். அவற்றை சரியாக தேர்வு செய்து அணிந்தால் அணிந்தவர்கள் வாழ்வு மேம்படும். அவற்றில் இருந்து வெளிப்படும் ஒளிக்கீற்றுக்கள், அதிர் வலைகள் நமது உடம்பில் உள்ள மின்காந்த அலைகளை சீர்படுத்தி மனதை வளமாக்கும். மனம் வளமானால் குணம் சிறப்பாகும். வாழ்வும் சிந்தனைகளும், எண்ணங்களும் மேலோங்கும் என்பது அனுபவப்பட்டவர்களில் சொற்கள். இவ்வாறு தங்க வைர நகைகளை அறிவியல், ஆன்மிக, வணிக ரீதியாக நெருங்கிய தொடர்பு கொண்ட செட்டிநாட்டுப் பகுதிகளில் உருவாகும் தங்க, வைர, நகைகள் உலகப் புகழ் பெற்றவையாக விளங்கின.

கலைத்திறன்

இன்றும் செட்டிநாட்டு பகுதி மக்கள் தங்களது இல்ல திருமணம் போன்ற விசேஷங்களுக்கு நகைகளைச் செய்ய தங்களுக்கு பரம்பரை பரம்பரையாக நகை செய்து கொடுக்கும் கைவினைக் கலைஞர்களை வீட்டிற்கு வரவழைத்து தங்கத்தை வைத்து தெய்வ வழிபாடு நடத்தி தங்க வைர நகைகளை கொடுக்கின்றனர். அவற்றை செய்யும் தொழிலை தெய்வமாக கருதும் இந்த பகுதி கைவினை கலைஞர்கள் அதனை பயபக்தியோடு பெற்று மிகவும் நுணுக்கமான கலைத் திறனோடு உயர்ந்த தரத்தோடு அனைவரையும் கவரும் வகையில் நகைகளை உருவாக்குகின்றனர்.

தற்போதைய உலகில், அதி நவீன எந்திர போட்டிகளுக்கு மத்தியில் கைவினைக் கலைஞர்கள் கைக் கருவிகளை கொண்டே மிக நேர்த்தியாக உருவாக்குகின்ற இந்த நகைகள் மிகவும் நம்பிக்கையானவையாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இப்பகுதியில் உருவாக்கப்படும் நகைகள் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

100 பவுன்

இந்த சிறப்புமிக்க கைவினைக் கலைஞர்களின் வாரிசுகள் தற்போதைய தொழில் போட்டி களாலும், அதி நவீன எந்திரங்களின் செயல்பட்டாலும் பாதிக்கப்பட்டு இந்த தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு செல்கின்றனர். இன்றளவில் இப்பகுதியில் வர்த்தகம் வளர்வது போல் தோன்றினாலும் பாரம்பரியம் சிறப்புகள் மறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இத்துறையில் தினமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் சிறப்பாக நடைபெறுகிறது.

செட்டிநாடு பகுதி மக்கள் அணிவதில் கழுத்தீறு மிக முக்கியமான மங்களகரமான நகையாகும் 100 பவுனுக்கு மேற்பட்ட தங்கத்தால் செய்யப்பட்ட இந்தநகையில் உள்ள திருமாங்கல்யத்தில் செல்வத்திற்கும் வளத்திற்கும் மகாலட்சுமி உருவமும், நோயின்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி, துணிவு, வாழ்நாள், வெற்றி, நல்லூழ், நுகர்ச்சி என்ற 16 பேறுகளையும் குறிக்கும் வகையில் 16 விதமான சிறிய வகை நகைகளும் அதில் அழகுபடுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு செட்டிநாட்டு நகைகள் அறிவியல் பூர்வமாகவும் ஆன்மிகச்சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.


Related Tags :
Next Story