மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
பெரியார் மண்ணான இந்தத் 'திராவிட பூமி'யில் மூடநம்பிக்கைகளும் உயிர்ப்பலிகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.
சென்னை:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரியார் மண்ணான இந்தத் 'திராவிட பூமி'யில் மூடநம்பிக்கைகளும், அதன் காரணமாக மோசடிகளும், உயிர்ப்பலிகளும்கூட, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது. 'பில்லி சூன்யம்' என்ற பெயராலும், 'மந்திரவாதிகள்' என்னும் 'சாமியார்கள்' என்ற பெயரிலும் பழைய கிரிமினல்களும், புதிய கிரிமினல்களும் அப்பாவி மக்களை ஏமாற்றி நரபலி வரைக்கும் செல்லுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சொந்தக் குழந்தையைக்கூட நரபலி கொடுத்த சம்பவங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் சுமார் 15 நாள்களுக்குமேல் தொடர் பிரசாரம் செய்யப்பட்டு, மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஊட்டினோம்.
விராலி மலையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரசாரத்தை நிகழ்த்தியதை, கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் வரவேற்றுப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் இதற்கு 'திராவிட மாடல்' ஆட்சி முன்னுரிமை தந்து, மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் ஒன்றைத் தனியே சட்டமன்றத்தில் நிறைவேற்றி, செயல்படுத்த முன்வரவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.