கொடைக்கானலில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

கொடைக்கானலில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் காந்திகிராமம் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட அளவிலான கபடி போட்டி, மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் விளையாடின. அதில், காந்திகிராமம் அணியும், கொடைக்கானல் கோவில்பட்டி அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் காந்திகிராமம் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கொடைக்கானல் கோவில்பட்டி அணி 2-ம் இடத்தை பிடித்தது.
இதையடுத்து கபடி போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் (பொறுப்பு) சிவராஜ் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா, தேசிய கபடி நடுவர் யாகமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கிடையே கோடைவிழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் ஆண்களுக்கான கால்பந்து போட்டி நடக்கிறது.






