கல்லணையை விட பழமையான கச்சமங்கலம் வெண்ணாற்று அணை
கல்லணையைவிட பழமையான, வெளியுலகத்திற்கு தெரியாமல் போன கச்சமங்கலம் வெண்ணாற்று அணை சுற்றுலா தலமாக மாறுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கல்லணையைவிட பழமையான, வெளியுலகத்திற்கு தெரியாமல் போன கச்சமங்கலம் வெண்ணாற்று அணை சுற்றுலா தலமாக மாறுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெளியுலகத்திற்கு தெரியாத அணை
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓடுகிற நீரை தேக்கி வைத்து பாசனத்துக்கு திருப்பி விட்ட பெருமை தமிழர்களையே சாரும். ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தை பண்டைய தமிழர்களிடம் இருந்து தான் நாம் தெரிந்து கொண்டோம் என கல்லணையை ஆய்வு செய்த சர்ஆர்தர் காட்டன் குறிப்பிட்டார்.
ஆனால் கல்லணைக்கு முந்தைய காலக்கட்டத்தை சார்ந்த கச்சமங்கலம் அணை குறித்து வெளியுலகத்துக்கு தெரியாமல் போனது. தமிழகத்தின் தொன்மை வாய்ந்த அணையாக திகழும் கல்லணைக்கு மிக அருகிலேயே அதே காலகட்டத்தில் கட்டப்பட்ட மற்றொரு அணை வெண்ணாற்றின் குறுக்கே உள்ளது. கல்லணைக்கு கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் துணை ஆறான வெண்ணாற்றில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள கச்சமங்கலம் எனும் ஊரில் இருக்கிறது இந்த அணை. ஒரு காலத்தில் இந்த இடத்தில் 3 மைல் தொலைவுக்கு ஏராளமான பாறைகள் கொண்ட ஒரு தொடர் மலை இருந்திருக்கிறது.
ஆற்றின் குறுக்கே கற்சிறை
கல்லணையில் இருந்து பிரியும் வெண்ணாறு முற்காலத்தில் விண்ணாறு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அந்த ஆறு கல்லணையில் இருந்து பிரியும் இடத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் வரை தரை மட்டத்துடன் இணைந்தே ஓடுகிறது. கச்சமங்கலம் எனும் இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. வரை ஊர்கள் இருக்கும் தரைமட்டத்தில் இருந்து வெண்ணாறு தாழ்ந்து மிக ஆழத்திலேயே செல்வதால் இருகரையில் இருக்கும் எந்த ஊருக்கும் ஆற்றில் இருந்து நேராக நீர்ப்பாசனம் செய்ய இயலாத நிலை இருந்தது.
இதை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த தமிழர்கள் கச்சமங்கலம் அருகே இருந்த நேரிமலை என்ற மலையில் இருந்து கற்பாறைகளை வெட்டி எடுத்து ஆற்றின் குறுக்காக ஒரு கற்சிறை எனப்படும் தடுப்பணையை கட்டியிருக்கிறார்கள். வெண்ணாற்றின் தண்ணீர் இந்த அணையில் நிரம்பியவுடன் அணையின் தென்கரை மதகு திறக்கப்பட்டு தண்ணீர் ஆனந்த காவேரி கால்வாய் மூலம் ராஜசுந்தரி சதுர்வேதமங்கலம் ஏரிக்குத் திருப்பிவிடப்படும். அந்த ஏரி இப்போது கள்ளப்பெரம்பூர் ஏரி என்று அழைக்கப்படுகிறது.
சங்க இலக்கியங்கள்
காவிரிக்கும் வெண்ணாற்றுக்கும் இடைப்பட்ட அந்த பகுதின் பெயர் ஆற்காட்டுக் கூற்றம். இது மேட்டு நிலம். இந்த ஏரி நிரம்பியவுடன் அணையின் வடக்கில் உள்ள மதகுகள் மூலம் பிள்ளைக் கால்வாய் வழியாக தண்ணீர் வீரசிகாமணி பேரேரி வரை சென்றது. இது இப்போது அல்லூர் அழிசிகுடி ஏரி என்பதாகும். கச்சமங்கலம் அணை குறித்து தகவல்கள் சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகையில் காணப்படுகிறது. சுமார் 2,200 முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இது அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். கரிகால்சோழன் காலத்துக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு இது கட்டப்பட்டதாக இருக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மன்னன் கரிகால்சோழனால் கட்டப்பட்ட கல்லணை இன்றைக்கு சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக காணப்படுகிறது. சனி, ஞாயிறு மட்டுமின்றி மற்ற விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கல்லணைக்கு குடும்பத்தினருடன் வந்து செல்கின்றனர். ஆனால் கல்லணைக்கு அருகில் உள்ள கச்சமங்கலம் அணை மக்களிடம் தெரியாத வகையில் உள்ளது. கல்லணையில் இருந்து கச்சமங்கலம் வழியாக பூதலூருக்கு சாலை வசதி உள்ளது. இந்த சாலையை செப்பனிட்டு, கல்லணைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கச்சமங்கலம் அணைக்கு வந்து செல்லும் வகையில் சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.