சிறந்த நீர் மேலாண்மை- கடவூர் ஊராட்சிக்கு தேசிய அளவில் 2-ம் பரிசு
சிறந்த நீர் மேலாண்மை திட்டத்திற்கு கடவூர் ஊராட்சிக்கு தேசிய அளவில் 2-ம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் விருது
இந்திய அரசின் ஜலசக்தி துறையின் 4-வது தேசிய நீர் விருதுகள்-2022 கடந்த 17-ந்தேதி டெல்லியில் வழங்கப்பட்டது. கரூர் மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கடவூர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை திட்டத்திற்கு சிறந்த ஊராட்சி பிரிவில் தேசிய அளவில் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. இந்த விருதினை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் கடவூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து ஆகியோரிடம் ஜலசக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கரூர் மாவட்டத்தில் கடவூர் கிராம ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி 3 பக்கம் மலைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை சார்ந்துள்ளது.
தடுப்பணைகள்
இப்பகுதியின் சராசரி மழைப்பொழிவு 380 மி.மீ. ஆகும். (மாவட்டத்தின் சராசரி மழைபொழிவு 745 மி.மீ). மண்ணின் ஈரப்பதத்தை அதிகரிப்பதற்கும், மண் அரிப்பை குறைப்பதற்கும், மேற்பரப்பு நீரை தேக்கி வைப்பதற்கும், திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறு ரீசார்ஜ் செய்வதை மேம் படுத்துவதற்கும் உள்ளூர் மக்களின் பரிசீலனைக்கு பிறகு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், தண்ணீரை தேக்கி வைக்கும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
கடவூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தடுப்பணைகளின் மூலமாக கடவூர் ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடவூர் ஊராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை முழுவதுமாக சரிசெய்யப்பட்டு விவசாயம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும், ஆழ்குழாய் கிணறு மற்றும் கிணறு ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் அதிக அளவில் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.