கைதான இத்ரீஸ், ஜமேஷா முபினுக்கும் நெருங்கிய தொடர்பு
கைதான இத்ரீஸ், ஜமேஷா முபினுக்கும் நெருங்கிய தொடர்பு
கோவை
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான முகமது இத்ரீஸ், ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்று என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.
கார் வெடிப்பு சம்பவம்
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
இதற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இந்த சம்பவத்தில் பலியானார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.
என்.ஐ.ஏ. விசாரணை
இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி, உமர் பரூக், பெரோஸ்கான், முகமது தவுபிக், சேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய மேலும் 5 பேரை கைது செய்தனர். இதுவரை கார் வெடிப்பு வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 11 பேர் மீது சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.
முபினின் நெருங்கிய நண்பர்
இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரீஸ் (வயது25) என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து முகமது இத்ரீசை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து அவரிடம் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முடிவில் அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சென்னைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் அவர் குறித்து பரபரப்பு தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபினின் நெருங்கிய நண்பராக முகமது இத்ரீஸ் இருந்துள்ளார். இவர் கார் வெடிப்புக்கு முன்பு அதற்கான ஆரம்ப கட்ட செயல்களில் ஈடுபட்டது தெரியவரவே அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவரை தொடர்ந்து கண்காணித்தும் வந்தனர். குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக முகமது இத்ரீசின் செல்போன் அழைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சதி ஆலோசனை
மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவரிகளிடம் விசாரணை நடத்தியதிலும், முகமது இத்ரீசுக்கு கார் வெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் ஜமேசாவுடன் இணைந்து சதி ஆலோசனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில் கைதான முகமது இத்ரீசை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவை கார் வெடிப்பு வழக்கில் 12-வது நபராக முகமது இத்ரீஸ் என்பவரும் கைதாகி உள்ளது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.