ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் இளைஞர்கள் ஆர்வம்


ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் இளைஞர்கள் ஆர்வம்
x
திருப்பூர்


ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் மடத்துக்குளம் பகுதி இளைஞர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

நாட்டு மாடுகள்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஏறு தழுவுதல் என்றழைக்கப்படும் ஜல்லிக்கட்டு உள்ளது. இது தமிழர்களின் வீரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் அடையாளமாக மட்டுமல்லாமல், இன்றைய நிலையில் பாரம்பரிய நாட்டு மாட்டு இனங்களை பாதுகாக்க உதவுவதாகவும் உள்ளது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் உள்ளிட்ட இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதனால் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களில் உள்ள மக்கள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதி இளைஞர்களின் கவனம் ஜல்லிக்கட்டு காளைகளின் பக்கம் திரும்பியுள்ளது.

நீச்சல் பயிற்சி

அந்தவகையில் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் காங்கயம், புலிக்குளம் உள்ளிட்ட நாட்டு மாட்டினங்களை வளர்த்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தயார்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து இளைஞர்கள் கூறியதாவது:-

'கொங்கு மண்டலத்தில் ரேக்ளா போட்டிகள் பிரபலமாக உள்ளது. இதற்கென வளர்க்கப்படும் மாடுகளை குடும்ப உறுப்பினர்கள் போல கருதி பாசமாக வளர்த்து வருகிறோம். அதேவகையில் தற்போது ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதிலும் ஒருசிலர் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளை கன்று பருவத்திலிருந்தே தயார் செய்யத் தொடங்கி விடுகிறோம்.அவற்றுக்கு தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை மற்றும் சோளத்தட்டை போன்ற உணவுகளை வழங்குகிறோம். மேலும் காளைகளுக்கு நீச்சல் மற்றும் நடைப் பயிற்சி வழங்குகிறோம்.அத்துடன் காளைகளுக்கு மண்ணைக் குத்திக் கிளறுதல், பாய்ச்சல் போன்ற பயிற்சிகளை வழங்குகிறோம். மேலும் மாதிரி வாடிவாசல் அமைத்து கையில் சிக்காமல் துள்ளிப் பாயும் வகையில் காளைகளுக்கு பயிற்சி வழங்குகிறோம். இவ்வாறு பல கட்ட பயிற்சிகளுக்குப் பிறகே காளைகள் களமிறங்க தயாராகிறது.

போராட்டங்கள்

ஆரம்ப கட்டங்களில் மிரட்சியால் பிடிபடும் காளைகள் கூட அடுத்தடுத்த போட்டிகளில் பரிசு ஜெயித்திருக்கின்றன.ஜல்லிக்கட்டு காளைகளை விவசாயத்துக்கோ வண்டி இழுப்பதற்கோ பயன்படுத்துவதில்லை.பொங்கல் சமயத்தில் வெளியூர் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வோம்.ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு என்பது செலவு பிடிக்கும் விஷயமாக இருந்தாலும் மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகவே உள்ளது.தற்போது ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் ஒருசிலர்மட்டுமே ஆர்வம் காட்டி வரும் நிலையில் விரைவில் பலரும் வளர்க்கத் தொடங்குவார்கள்.அதன் மூலம் நமது பாரம்பரிய நாட்டு மாட்டினங்களை அழியாமல் காப்பாற்ற முடியும்'என்று இளைஞர்கள் தெரிவித்தனர்.ஜல்லிக்கட்டுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வெறுமனே கோஷம் போட்டு விட்டு போகாமல், காளைகளை வளர்க்கவும், களத்தில் இறங்கி ஏறு தழுவவும் தமிழ் இளைஞர்கள் தயாராகி வருவது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது.


Next Story