கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 13 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு


கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 13 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு
x
தினத்தந்தி 5 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 10:48 AM GMT)

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 13 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள, 13 கிராம பஞ்சாயத்துகளிலுள்ள விவசாயிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

வேளாண் வளர்ச்சி திட்டம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள திட்டங்குளம், கிழவிபட்டி, மந்தித்தோப்பு, நாலாட்டின் புத்தூர், வில்லிசேரி, உருளைகுடி, சுரைக்காய்பட்டி, மேல ஈரால், இளையரசனேந்தல், வெங்கடாசலபுரம், அய்யனேரி, புளியங்குளம், பிள்ளையார் நத்தம் ஆகிய 13 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சுரைக்காய்பட்டி கிராமத்தில் குடிமியான்மலை வேளாண்மை பயிற்சி நிலைய இயக்குனர் சங்கரலிங்கம் விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்று வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

3 ஆயிரம் கன்றுகள்

இந்த திட்டத்தில் ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங் கன்றுகள் வீதம் முதல் கட்டமாக 5 பஞ்சாயத்துகளில் உள்ள 600 விவசாயிகளுக்கு 3 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனி வேலாயுதம் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் நடவு மற்றும் வளர்ப்பு முறைகள் குறித்து தொழில்நுட்ப விளக்கம் அளித்தார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஜென்கின் பிரபாகர், உதவி இயக்குனர் சீ. நாகராஜ் வேளாண்மை அலுவலர் காயத்ரி, துணை வேளாண்மை அலுவலர் தாணுமாலயான், உதவி வேளாண்மை அலுவலர் சண்முக ஈஸ்வரன், தொழில்நுட்ப மேலாளர் தனபால் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story