கலையை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருதா? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி


கலையை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருதா? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி
x

கலையைப்பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். முறையாக செயல்படவில்லை என்றால் இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மதுரை,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கிறது. இந்த விருது, 5 பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது.

கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயது வரம்பு மற்றும் தகுதி, நெறிமுறை வகுக்கப்படவில்லை.

கடந்த 2019-2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா 20.2.2021 அன்று நடந்தது. இதில் தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்த விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழில் துறை சார்ந்த தலைவர், செயலாளர், உறுப்பினர் ஆகியோரின் கையெழுத்து இல்லை. அவசர கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தகுதி இல்லாத நபர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதை திரும்பப்பெற வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லை. எனவே, 2019-2020-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதை தகுதி இல்லாதவர்களிடம் இருந்து திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கலையைப்பற்றி தெரியாதவர்கள்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கடந்த ஆண்டு நடந்த விழாவில் கலைமாமணி விருதை முந்தைய அரசுதான் வழங்கியது என்றார்.

அப்போது நீதிபதிகள், கலைமாமணி விருதுக்கு தகுதியானவர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்? கலையைப்பற்றி தெரியாதவர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என்று அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், கலைத்துறையில் சாதனைகள் செய்தவர்களுக்குத்தான் கலைமாமணி விருது வழங்கப்பட வேண்டும். தற்போது 2 படங்களில் நடித்து விட்டால் அவர்களுக்கு விருது வழங்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இயல், இசை, நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் இந்த மன்றத்தை கலைக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பதில் அளிக்க உத்தரவு

பின்னர் இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தலைவர், உறுப்பினர் செயலாளர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story