பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறப்பு: காலிங்கராயன் வாய்க்கால் சீரமைக்கும் பணி தீவிரம்


பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறப்பு: காலிங்கராயன் வாய்க்கால் சீரமைக்கும் பணி தீவிரம்
x

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், வாய்க்காலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு

ஈரோடு

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், வாய்க்காலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தூர்வாரும் பணி

காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மற்றும் மழைநீர் வரத்தை பொறுத்து காலிங்கராயன் வாய்க்காலில் தொடர்ந்து 10 மாதங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும், நெல் பயிரும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த வாய்க்கால் பாசன பகுதியில் தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை சார்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. வாய்க்காலில் உள்ள மதகுகள், பாலங்கள் சீரமைக்கப்படுகிறது. மேலும், பேபி வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்ததால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்றது. இந்த பேபி வாய்க்காலையும் பொக்லைன் எந்திரம் மூலமாக தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

90 சதவீதம்

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

காலிங்கராயன் வாய்க்காலில் ரூ.76 கோடியே 80 லட்சம் செலவில் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் 513 மதகுகள், 21 பாலங்கள், 30 அடி மதகுகள் ஆகியன சீரமைக்கப்படுகிறது. மேலும், வாய்க்காலின் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்காக கான்கிரீட் போடப்படாத பகுதியில் வாய்க்கால் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது.

விரைவில் தண்ணீர் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேபி வாய்க்காலில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் கழிவுநீர் தேங்கி நின்றது. எனவே அந்த வாய்க்காலும் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story