சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை ;திரளான பக்தர்கள் பங்கேற்பு


சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை ;திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:46 PM GMT)

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கலிவேட்டை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்,

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கலிவேட்டை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆவணி திருவிழா

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் பணிவிடை, உச்சிப்படிப்பு, வாகன பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

8-வது நாளான நேற்று அதிகாலையில் நடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை நடந்தது. மாலை 5 மணிக்கு அய்யா கலி வேட்டைக்கு புறப்பட்டார். அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வீற்றிருக்க கலி வேட்டைக்கு வாகனம் புறப்பட்டது. இந்த வாகன பவனிக்கு குரு ஏ.சாமி தலைமை தாங்கினார்.

கலிவேட்டை

தலைமை பதியை சுற்றி வந்த வாகனம், நான்கு ரதவீதிகளையும் சுற்றி இரவு 8 மணிக்கு முத்திரி கிணற்றங்கரையை சென்றடைந்தது. அங்கு திரளான பக்தர்கள் முன்னிலையில் கலி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான் கோவில்விளை, கோட்டையடி புதூர், சோட்டப் பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வழிநெடுகிலும் அய்யா வழி பக்தர்கள் சுருள் வைத்து வழிபாடு செய்தனர். பிறகு வாகனம் தலைமை பதியை வந்தடைந்த பிறகு அய்யா வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சியளித்தார். கலிவேட்டை நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) அனுமன் வாகன பவனியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்திர வாகன பவனியும், நாளைமறுநாள் (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.


Next Story