பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் முன்பு நடனமாடிய காளியம்மன்
கோடாலி கருப்பூரில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் முன்பு காளியம்மன் நடனமாடினார். இதனால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் மகாகாளியம்மன் கோவில் திரு நடன வீதியுலா நிகழ்ச்சி கடந்த மே 1-ந் தேதி காப்புக்கட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 3-ந் தேதியிலிருந்து அப்பகுதியில் காளி ஆட்டம் என்னும் காளியம்மன் திரு நடன வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோடாலி கருப்பூரில் முக்கிய வீதிகளில் காளியம்மன் வீடு வீடாக தீபாராதனையை ஏற்றி நடனமாடி குறி சொல்லும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. சித்ரா பவுர்ணமியையொட்டி கோடாலி கருப்பூர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்ய திட்டமிடப்பட்டு அதற்காக பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதியில் சரண கோஷங்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் குறி சொல்லிக் கொண்டிருந்த காளியம்மன் திடீரென எழுந்து பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு முன்பாக நடனமாடி பக்தர்களுக்கு அருள் காட்சி வழங்கினார். இதனால் அப்பகுதியில் கூடியிருந்த மக்களும், பக்தர்களும் பக்தி கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.