கள்ளழகர் கோவில் நிலத்தை விற்க முயன்று ரூ.70 லட்சம் மோசடி


கள்ளழகர் கோவில் நிலத்தை விற்க   முயன்று ரூ.70 லட்சம் மோசடி
x

கள்ளழகர் கோவில் நிலத்தை விற்க முயன்று ரூ.70 லட்சம் மோசடி செய்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்

கள்ளழகர் கோவில் நிலத்தை விற்க முயன்று ரூ.70 லட்சம் மோசடி செய்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில் நிலம்

விருதுநகர் சூலக்கரை பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி. இவரது மனைவி ரங்கநாயகி (வயது 50). இவருடைய சகோதரர் சூரிய நாராயணன். சிங்கப்பூரில் தொழில் செய்து வரும் நிலையில் அவர் அனுப்பும் பணத்தை வைத்து விருதுநகர் பகுதியில் ரங்கநாயகி சொத்துக்கள் வாங்கி உள்ளார்.

இதனையறிந்த திண்டுக்கல் மாவட்டம் சிவகிரிபட்டியை சேர்ந்த பத்மநாபன் என்பவர் ரங்கநாயகியை சந்தித்து, நான் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும், ரியல் எஸ்டேட் தொழில்செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் மதுரை வண்டியூர் கிராமத்தில் அறக்கட்டளைக்கு சொந்தமான சுமார் 12¾ ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அதனை வாங்கிக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

முன் பணம்

ரங்கநாயகி நிலத்தின் உரிமையாளர்களை அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சந்திரன், குழந்தைச்செல்வம் ஆகிய 2 பேரையும் பத்மநாபன், அழைத்து வந்து நிலத்தை ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கிரையம் பேசியுள்ளார். இதையடுத்து கடந்த 11.1.2021-ல் பத்மநாபன், அவரது மகன் சதீஷ்குமார், சந்திரன், குழந்தை செல்வம், சுமதி, அங்கு ராஜ் ஆகியோர் ரங்கநாயகி மற்றும் அவரது சகோதரர் வீரபாண்டி என்பவரிடம் ரூ. 50 லட்சம் முன்பணமாக பெற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து கடந்த 16.7.2021-ல் பத்மநாபன் மேலும் ரூ.20 லட்சம் கொடுத்தால் சீக்கிரமாக பத்திர பதிவு செய்து கொடுக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது. அதன்பேரில் ரங்கநாயகி, பத்மநாபன் உள்ளிட்ட 6 பேரிடம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார்.

கள்ளழகர் கோவில்

ஆனால் கிரையம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில் ரங்க நாயகி விசாரித்த போது பத்மநாபன் கூறிய நிலம் மதுரை இந்து சமய அறநிலையத்துறையின் கள்ளழகர் கோவிலுக்கு பாத்தியப்பட்டது என தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து ரங்கநாயகி, பத்மநாபனிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரங்கநாயகி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பத்மநாபன், அவரது மகன் சதீஷ்குமார், குழந்தை செல்வம், சந்திரன், சுமதி, அங்கு ராஜ் ஆகிய 6 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் விசாரணையில் பத்மநாபன் பணி ஓய்வு பெற்ற நீதிபதி என கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது.


Related Tags :
Next Story