10 லட்சத்து 90 ஆயிரத்து 21 வாக்காளர்கள்; பெண்களை விட ஆண்கள் அதிகம்


10 லட்சத்து 90 ஆயிரத்து 21 வாக்காளர்கள்;    பெண்களை விட ஆண்கள் அதிகம்
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி 10 லட்சத்து 90 ஆயிரத்து 21 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்களைவிட ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி


வரைவு வாக்காளர் பட்டியல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1.1.2024-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு கடந்த 5.1.2023 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி நடந்தது. அதன்படி 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஷ்ரவன்குமார், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

4 சட்டமன்ற தொகுதி

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,274 வாக்குச்சாவடி மையங்களில் 5 லட்சத்து 46 ஆயிரத்து 938 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 42 ஆயிரத்து 855 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 228 பேரும் என மொத்தம் 10 லட்சத்து 90 ஆயிரத்து 21 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்களை விட ஆண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா்.

பொதுமக்கள் பார்வைக்கு...

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர், சப்-கலெக்டர், கோட்டாட்சியர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், நியமன வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

2023-வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகளின் கீழ் 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை), 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), 18-ந்தேதி (சனிக்கிழமை), 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சிறப்பு முகாம் நாட்களில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் கொடுக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 5.1.2024 அன்று வெளியிடப்படும்.

பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய (https://voters.cci.gov.in) என்ற இணையவழி அல்லது voter help line mobile app மூலம் பதிவு செய்யலாம். மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி நல்ல முறையில் நடைபெற பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்..

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story