கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த மழை தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த மழை  தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

கள்ளக்குறிச்சி


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரத்தில் நேற்று காலையில் வெயில் வாட்டிய நிலையில், மாலை 6 மணிக்கு இடி- மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகும் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.

விழுப்புரம் காகுப்பம் செல்லும் வழியில் உள்ள மின்வாரிய காலனி முதல் தெரு பகுதியில் கோலியனூரான் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தண்ணீரை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு உடனே தகவல் தெரிவித்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இரவு 9 மணியளவில் ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகில் திரண்டு வந்து திடீரென அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இதேபோல் விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களான பிடாகம், கண்டமானடி, கோலியனூர், சாலைஅகரம், காணை, வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி மற்றும் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்றும் மழை நீடித்தது. கள்ளக்குறிச்சியில் மாலை 4 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, இரவு 7 மணியை கடந்தும் பெய்து கொண்டே இருந்தது. இதனால், கள்ளக்குறிச்சி துருகம் சாலை, சேலம் மெயின்ரோடு மற்றும் பல்வேறு தெருக்கள், சாலைகளில் கழிவுநீருடன் கலந்த மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.இதேபோன்று சங்கராபுரம், கல்வராயன் மலை என்று மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் மழை பெய்தது.


Next Story