கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ் - கலெக்டர் உத்தரவு
கனியாமூர் கலவர வழக்கில் தொடர்புடைய 4 பேரை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டு காவல்துறை வாகனங்கள் மற்றும் பள்ளியில் பொருட்களை சேதப்படுத்தியும், தீயிட்டு கொளுத்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட லட்சாதிபதி (34), ஷர்புதீன் (38), சரண்ராஜ் (34), மணி (44) ஆகியோர் வேலூர் மற்றும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் 4 பேரையும் ஓராண்டு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து லட்சாதிபதி, ஷர்புதீன், சரண்ராஜ், மணி ஆகிய 4 பேரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.