கள்ளக்குறிச்சி கலவரம்: சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் அமைச்சர்கள் ஆய்வு


கள்ளக்குறிச்சி கலவரம்: சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் அமைச்சர்கள் ஆய்வு
x

கள்ளக்குறிச்சியில் போராட்டகாரர்களால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் காவல்துறையினர் மீது கல்வீச்சு காவல்துறையின் வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர் .

பின்னர் வகுப்பறைகளுக்குள் புகுந்து ஸ்மார்ட் போர்டு, கணினி, பெஞ்ச், சேர் ஆகியவற்றையும் நொறுக்கினர். பள்ளி கட்டிடத்திற்கும் தீவைத்தனர். இதில், பல வகுப்பறைகள் தீக்கிரையாயின. பள்ளி அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சான்றிதழ்களும் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. பள்ளி கேட், அலங்கார வளைவு ஆகியவற்றையும் உடைத்து சேதப்படுத்தினர்.

மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டகாரர்களால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி. கணேசன் ஆகியோர் பள்ளி வளாகததில் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story