கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 5 May 2023 6:45 PM GMT (Updated: 5 May 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தேரோட்டம்

பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தில்லை கோவிந்தராஜ பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் மந்தைவெளியில் இருந்து புறப்பட்டு கச்சிராயப்பாளையம் சாலை, காந்தி ரோடு, நான்குமுனை சந்திப்பு, சேலம் மெயின்ரோடு, கவரைத்தெரு, கிராமச்சாவடி தெரு வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story