கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் தீவிரம்


கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் தீவிரம்
x

கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் தீவிரம்

தஞ்சாவூர்

தஞ்சையில் கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கல்லணைக்கால்வாய்

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பிரிந்து செல்வது கல்லணைக்கால்வாய். இது ஏறத்தாழ 148 கிலோ மீட்டர் நீளத்துக்கு முதன்மை நீர்வழித்தடமாகவும், 636 கிலோ மீட்டர் நீளத்துக்கு கிளை வாய்க்கால்களுடனும் புதுக்கோட்டை மாவட்டம் வரை செல்கிறது. இதனை கொண்டு 2.27 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்த நிலையில் கல்லணைக்கால்வாயை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் ரூ.2,639.15 கோடி மதிப்பீட்டில் கரைகள், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

புனரமைப்பு பணி

இந்த நிலையில் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவை விட அதிக அளவு நடைபெற்றது. இது ஒரு புறம் இருக்க தண்ணீர் வந்ததால் கல்லணைக்கால்வாயில் நடந்து வந்த புனரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது சம்பா, தாளடி பணிகள் முடிந்து ஆற்றில் தண்ணீர் வரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது மீண்டும் கல்லணைக்கால்வாயில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நவீன எந்திரங்கள்

அதன்படி தற்போது தஞ்சை 20-கண் பாலம் பகுதியில் இருந்து தஞ்சை புறவழிச்சாலை பகுதி வரையிலான கல்லணைக்கால்வாய் பகுதியில் பணிகள் துரிதமாக நடக்கிறது. கரைகளை பலப்படுத்தி சாய்வு தளம், கான்கிரீட் தளம் அமைக்க நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பொக்லின் எந்திரங்கள், லாரிகள் மூலம் இரவு, பகலாக புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் தண்ணீர் தடையின்றி வேகமாக கடை மடை வரை செல்லும், கரைகளும் வலுவானதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Next Story