கல்குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது


கல்குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பதியில் கல்குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பெரும்பதியில் கல்குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

கல்குவாரிக்கு எதிர்ப்பு

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் புரவிபாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பெரும்பதியில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள், கோவில்கள், பள்ளிகள் மற்றும் தடுப்பணைகளுக்கு அருகில் கல்குவாரி தொழிலுக்கு அனுமதி கோரியுள்ளதாக தெரிகிறது. விவசாயம் தவிர கல்குவாரி, கிரசர் போன்ற எந்தவொரு கனிமம் சார்ந்த தொழில்களுக்கும் அனுமதி வழங்க பரிந்துரை செய்ய வேண்டாம்.

கல்குவாரி, கனிமம் சார்ந்த தொழில்களுக்கு அனுமதி வழங்கினால் அதில் வைக்கும் வெடி சத்தத்தில் வீடுகள் கடுமையாக சேதமடையும். வீடுகளில் பெரும்பாலானவை மண்ணில் கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் ஆகும். வெடி வைக்கும் போது பறந்து வந்து விழும் கற்களால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். மேலும் நிலத்தடிநீர் பாதித்து விவசாயம் அழிந்து விடும்.

சட்ட பாதுகாப்பு

தடுப்பணைகள் கடுமையாக சேதமடைய கூடும். குறிப்பாக கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்தப்படும் என்பதால் நாங்கள் காலம்காலமாக வாழ்ந்து வரும் மண்ணே சில ஆண்டுகளில் இல்லாத சூழ்நிலை உருவாகி மாற்று இடத்துக்கு குடிபெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கனவே கல்குவாரி அமைக்க ஆட்சேபணைகளை தெரிவித்து உள்ளோம். இதுகுறித்து ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

எனவே தீர்மானத்தையும் பதிவு செய்து கல்குவாரிக்கு அனுமதி வழங்காத வகையில் பரிந்துரை செய்ய வேண்டும். விவசாய நிலங்கள், கோவில்கள், வீடுகள், தடுப்பணைகள் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் சட்ட பாதுகாப்புடன் காப்பாற்றி கொள்ள ஏதுவாக தமிழக அரசு சிறு கனிமங்கள் சலுகை விதிகளில் உரிய திருத்தம் செய்ய ஏதுவாக பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story