கழிவுகளால் பாழாகும் அமராவதி பிரதான கால்வாய்


கழிவுகளால் பாழாகும் அமராவதி பிரதான கால்வாய்
x
திருப்பூர்


மடத்துக்குளம் பகுதியில் கழிவுகளால் பாழாகி வரும் அமராவதி பிரதான கால்வாயைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய ஆயக்கட்டு

அமராவதி பிரதான கால்வாய் மூலம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 64 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாய் அமராவதி அணையில் தொடங்கி, பல கிராமங்களைக் கடந்து தாராபுரம் பகுதி கடை மேடைகளை சென்றடைகிறது. புதிய ஆயக்கட்டு விவசாய நிலங்களின் பாசனத்துக்காக மட்டுமல்லாமல் ஏராளமான கால்நடைகளின் குடிநீருக்காகவும் இந்த கால்வாய் நீர் பயன்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த கால்வாயில் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டும் கழிவுநீர் கலக்கப்பட்டும் மாசடைந்து வருகிறது. அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் கால்வாய் குப்பைகள் நிறைந்து, கழிவுகள் கலந்து நோய்களைப் பரப்பும் நிலையில் உள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை பிரதான கால்வாய் கடக்கும் கிருஷ்ணாபுரம் பகுதியில் அதிக அளவில் கழிவுகள் தேங்கி நிற்கிறது. மேலும் கால்வாய்க் கரைகளை மட்டுமல்லாமல் கால்வாய்களையும் பலர் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் கால்வாயின் படிக்கட்டுகளில் கால் வைக்கவே கூசும் அளவுக்கு அலங்கோலமாக உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கலந்து பல நோய்கள் பரவக் காரணமாகிறது. கால்வாய் கரையில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து கால்வாயில் விழுகிறது.

கால்வாயில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும்போது அனைத்து விதமான கழிவுகளும் விளைநிலங்களை சென்று சேர்கிறது. இதனால் விளைநிலங்கள் பாழாகி வருகிறது. மேலும் கால்வாய்க்கரையை ஒட்டி சோழமாதேவி வரை ஏராளமான விளைநிலங்கள் உள்ள நிலையில் கடும் துர்நாற்றத்தால் விவசாயிகள் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story