சாராயம் காய்ச்சும் தலைமை இடமாக கல்வராயன்மலை மாறி வருகிறது.
சாராயம் காய்ச்சும் தலைமை இடமாக கல்வராயன்மலை மாறி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகவும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியாகவும் கல்வராயன்மலை உள்ளது. இங்குள்ள 171 மலை கிராமங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு மேகம், கவியம், பெரியார் உள்பட 9 நீர்வீழ்ச்சிகள், படகு குழாம், மணிமுக்தா அணை உள்ளது. இது தவிர ஏராளமான மூலிகை செடிகளும் உள்ளன. இவைகளை பார்த்து ரசிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த கல்வராயன்மலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.
பல்வேறு சிறப்பு வாய்ந்த கல்வராயன்லை, சாராய வியாபாரிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்று குமறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஆம், இது சாராயம் காய்ச்சும் தலைமை இடமாக மாறிவிட்டது. அது பற்றி காண்போம்...
சாராய தொழிலில் அதிக லாபம்
அடர்ந்த வனப்பகுதி என்பதால் கல்வராயன்மலை மீது சாராய வியாபாரிகளின் கண்பார்வை பட்டது. முதலில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குறைந்த அளவு சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தனர். இதில் நல்ல லாபம் கிடைத்ததால் சாராய வியாபாரிகள், தங்களின் தொழிலை மேம்படுத்திக்கொண்டனர்.
இதற்காக மலைகளுக்கு இடையே ஆங்காங்கே உள்ள நீரோடைகள் அருகில் சாராயம் காய்ச்சும் இடத்தை தேர்வு செய்தனர். சாதாரணமாக ஆட்கள் செல்ல முடியாத இடத்தில் இஷ்டம்போல் சாராயம் காய்ச்ச தொடங்கினர்.
இங்கு தயாரிக்கப்படும் சாராயம், லாரி டியூப்கள், கேன்களில் நிரப்பி மோட்டார் சைக்கிள், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
பணத்தை வாரி இறைக்கும் வியாபாரிகள்
கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவது பற்றியும், அதனை விற்பனை செய்வோர் பற்றியும் புகார் தெரிவிக்காமல் இருப்பதற்காக கல்வராயன்மலையில் உள்ள கிராமங்களுக்கும், மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் சாராய வியாபாரிகள் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.
சாராயம் விற்க ஏலம்
இதன் உச்சபச்ச கொடுமை என்னவென்றால், குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதற்காக உரிமம் பெற ஏலம் விடப்படுகிறது. அதில் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள், சாராய வியாபாரிகள் பங்கேற்பார்கள்.
இதில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கும் சாராய வியாபாரிகளுக்கே அந்த கிராமத்தில் ஓராண்டு சாராயம் விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கப்படும். அவ்வாறு சாராயம் விற்பனை செய்பவரை கிராம மக்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அதே சமயம் வேறுயாரேனும் அந்த கிராமத்தில் சாராயம் விற்பனை செய்ய வந்தால் விரட்டியடிப்பார்கள். இது தான் கல்வராயன்மலையில் எழுதபடாத சட்டமாக உள்ளது. இதனால் கல்வராயன்மலையில் சாராய தொழில் கொடிகட்டி பறக்கிறது.
100 போலீசார் அதிரடி வேட்டை
இப்படிபட்ட சூழ்நிலையில்தான், மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்த 14 பேர் பரிதாபமாக இறந்தனர். தமிழகத்தையை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பின் தற்போதுதான் போலீசார் விழித்துள்ளனர். கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கல்வராயன்மலையில் முகாமிட்டு சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 லட்சம் லிட்டர் ஊறல் அழிப்பு
இது தவிர கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான தனிப்படை போலீசாரும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 5 டன் வெல்லம் மற்றும் 200 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டதோடு, இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டிரோன் மூலமும் சாராய ஊறலை கண்டறிந்து, அதனையும் போலீசார் அழித்துள்ளனர்.
போலீசாருக்கு சவால்
போலீசாரின் அதிரடி நடவடிக்கை ஒரு புறம் தீவிரமாக இருந்தாலும், சாராய வியாபாரிகள் அச்சப்படவில்லை. அவர்கள் பலயுக்திகளை கையாளுகின்றனர்.
போலீசாருக்கு சவால் விட்டு, மாற்று இடங்களில் வழக்கம்போல் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் நெருக்கடி
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கல்வராயன்மழையில் சாராய தொழில் படுஜோராக நடக்க குறிப்பிட்ட போலீசாருக்கு மாதந்தோறும் மாமூலும் செல்கிறது. அதனை பெற்றுக்கொண்டு போலீசாரும் கண்டுகொள்வதே இல்லை.
போலீஸ் உயர் அதிகாரிகள் நெருக்கடிகள் கொடுத்தால் மட்டும் சாராய வியாபாரிகளே சிலரை போலீசாரிடம் ஒப்படைப்பார்களாம். அவர்களும் பெயரளவிற்கு சாராயம் விற்றதாக சிலரை கைது செய்வார்கள். அவ்வாறு கைதாகி சிறைக்கு செல்வோரின் குடும்பத்துக்கு குறிப்பிட்ட தொகையை சாராய வியாபாரிகளே கொடுப்பதாக தெரிகிறது.
போலீசார் தடுமாறுகிறார்கள்
ஆனால் தற்போது விஷச்சாராய சாவு சம்பவத்திற்கு பிறகு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டாலும், கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதை முற்றிலுமாக தடுக்க முடியாமல் போலீசார் தடுமாறுகிறார்கள்.
இந்த தொழிலில் அதிக லாபம் பார்த்து வளர்ந்து விட்டார்கள். இனிமேலும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் தற்போது சாராயம் காய்ச்சுவதாக கைது செய்யப்படுபவர்கள், சாதாரண கூலித்தொழிலாளர்கள்தான். இவர்களை கைது செய்து, சிறையில் அடைப்பதையே போலீசார் தற்போதும் கையாள்கிறார்கள். மாறாக அவர்களிடம், சாராயம் எங்கு காய்ச்சப்படுகிறது?, சாராய காய்ச்சும் வியாபாரிகள் யார்-யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும். மேலும் சாராயம் காய்ச்ச தேவையான மூலப்பொருட்களை கல்வராயன்மலைக்கு கொண்டு செல்வதை தடுக்கவும், அங்கு சாராயத்தை காய்ச்சி வாகனங்களில் கடத்துவோரை தடுக்கவும் கூடுதலாக சோதனை சாவடிகளை அமைக்க வேண்டும். அங்கு நேர்மையான போலீஸ்காரர்களை பணியில் அமர்த்த வேண்டும். அவ்வாறு செய்தால்தான் கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதை முற்றிலுமாக தடுக்க முடியும் என்றனர்.