சரியான நேரத்திற்கு அதிகாரிகள் வராததால்வெறிச்சோடி கிடக்கும் கல்வராயன்மலை தாலுகா அலுவலகம்


சரியான நேரத்திற்கு அதிகாரிகள் வராததால்வெறிச்சோடி கிடக்கும் கல்வராயன்மலை தாலுகா அலுவலகம்
x

சரியான நேரத்திற்கு அதிகாரிகள் வராததால் கல்வராயன்மலை தாலுகா அலுவலகம் ஆட்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் சாதிசான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற மலைவாழ்மக்கள் நீண்ட நேரம் காத்துக்கிடப்பதால் அவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்னர். இங்குள்ள மக்கள் கடந்த காலங்களில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற நீண்ட தொலைவில் உள்ள சின்னசேலம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவந்தனர். இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

இதை தவிர்க்க கடந்த அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் கல்வராயன்மலையில் தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள், புதிய தாலுகா அலுவலகத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர்.

சரியான நேரத்திற்குஅதிகாரிகள் வருவதில்லை

ஆனால் தற்போது தாலுகா அலுவலகத்திற்கு அதிகாரிகள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை. சில நாட்களில் பெரும்பாலான அதிகாரிகள் பணிக்கு வருவதில்லை. இதனால் பெரும்பாலான நேரங்களில் தாலுகா அலுவலகம் ஆட்கள் இன்றி வெறிச்சோடிேய கிடக்கிறது.

இதன் காரணமாக சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழை கேட்டு விண்ணப்பிக்க வரும் மலைவாழ் மக்கள் நீண்ட நேரம் தாலுகா அலுவலகத்தின் முன்பு காத்துகிடப்பதால், அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் திடீா் ஆய்வு மேற்கொண்டு காலதாமதமாக வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தமிழக அரசு எங்களின் நலன் கருதி, கல்வராயன்மலையில் புதிதாக தாலுகா அலுவலகத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு பணிக்கு வராததால், எங்களுக்கு தேவையான சான்றிதழ் உடனுக்குடன் கிடைப்பதில்லை. இதனால் நாங்கள் மீண்டும், மீண்டும் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். தினந்தோறும் அதிகாரிகள் பகல் 12 மணிக்குதான் அலுவலகத்திற்கு வருகிறார்கள்.

பின்னர் பிற்பகல் 3 மணிக்கு எல்லாம் சென்றுவிடுகிறார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால், நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். எங்களது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு தாலுகா அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. சில நாட்களில் பெரும்பாலான அதிகாரிகள் பணிக்கு வருவதே கிடையாது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story