தேவூர் அருகேகல்வடங்கம் காவிரி ஆறு வறண்டதால் வெளியே தெரியும் கற்சிலைகள்
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆறு தண்ணீர் இன்றி வறண்டதால், ஆற்றில் மூழ்கி இருந்த வடிவம் பெறாத சாமி சிலைகள் வெளியே தெரிகின்றன.
தேவூர்,
சேலம் மாவட்டம், தேவூர் அருகே கல்வடங்கம் வழியாக காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. புனித நீர் எடுக்கும் தலமாக திகழும் இந்த கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு, சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து கோவில் திருவிழாக்களுக்கு பக்தர்கள் புனித தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கற்சிலைகள் வடிவமைக்கும் சிற்பிகள் சரியான சாமி உருவத்திற்கு வராத சாமி சிலைகள் மற்றும் அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட கல்லினால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் பொருட்களை கொண்டு வந்து கல்வடங்கம் காவிரியாற்றில் விட்டு செல்வார்கள்.
தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து ஆறு வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் ஏற்கனவே இந்த ஆற்றில் போடப்பட்டு இருந்த விநாயகர், முருகன், முனியப்பன், பத்ரகாளி உள்ளிட்ட சாமி சிலைகள் மற்றும் அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட சரியான வடிவம் இல்லாத கல்லால் ஆன பொருட்கள் தற்போது ஆங்காங்கே வெளியே தெரிகின்றன.
வழிபாடு
இந்த நிலையில் முக்கிய விசேஷ தினங்களில் தேவூர், எடப்பாடி, சங்ககிரி, ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கல்வடங்கம் காவிரியாற்றில் புனித நீராட வரும் பக்தர்கள், காவிரியாற்றில் ஆங்காங்கே காட்சியளிக்கும் ஓரளவு சரியான முறையில் வடிவமைப்பு பெற்ற விநாயகர் சிலைகளை வழிபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக இந்த கற்சிலைகளுக்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜை பொருட்கள் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.